×

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ரூ.6,000 வெள்ள நிவாரணம் வழங்கும் பணி தொடக்கம்

நெல்லை: நான்கு மாவட்ட மழை, வெள்ள சேதங்களை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், கனமழை வெள்ளத்தால் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட தாலுகாக்களுக்கு ரூ.6000, பிற தாலுகாக்களுக்கு ரூ.1000 வெள்ள நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து வெள்ள நிவாரண நிதி ரூ.6000 விநியோகம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று காலை தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் 796 ரேஷன் கடைகள் மூலம் 3 லட்சத்து 40 ஆயிரத்து 552 ரேஷன் கார்டுகளுக்கு ரூ.6 ஆயிரம் ரொக்கம், 5 கிலோ அரிசி ஆகியவை வழங்கும் பணி தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல், சாத்தான்குளம் ஆகிய 5 தாலுகாக்கள் முழுவதும் 3 லட்சத்து 23 ஆயிரத்து 108 ரேஷன் கார்டுகளுக்கு ரூ.6 ஆயிரம் வெள்ள நிவாரண தொகை மற்றும் 5 கிலோ அரிசி வழங்கும் பணி தொடங்கியது. நெல்லை மாவட்டத்தில் மானூர், நாங்குநேரி தாலுகாக்கள் முழுவதும், ராதாபுரம், திசையன்விளை தாலுகாக்களில் மேலே குறிப்பிட்ட கிராமங்கள் தவிர பிற வருவாய் கிராமங்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 705 ரேஷன்கார்டுகள், தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், ஒட்டப்பிடாரம்,

கயத்தாறு என 5 தாலுகாக்கள் முழுவதும் 2 லட்சத்து 14 ஆயிரத்து 717 ரேஷன் கார்டுகள், தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், கடையநல்லூர், சங்கரன்கோவில், செங்கோட்டை, சிவகிரி, தென்காசி, திருவேங்கடம், வீகேபுதூர் ஆகிய 8 தாலுகாக்கள் முழுவதும் 4 லட்சத்து 74 ஆயிரத்து 939 ரேஷன்கார்டுகள் என மொத்தம் 14 லட்சத்து 31 ஆயிரத்து 164 பேருக்கு ரூ.1000 நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. இதேபோல் குமரி மாவட்டத்தில் 5 லட்சத்து 76 ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

* மக்கள் மீண்டெழ உடனடியாக நிவாரணத் தொகை
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘தென் மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட வெள்ளப் பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டெழ அறிவித்த நிவாரணத் தொகையை உடனடியாக வழங்கத் தொடங்கிவிட்டோம். மழைவெள்ளம் ஏற்பட்டவுடன் மக்களுக்குத் துணையாகக் களத்தில் இருந்த அமைச்சர் பெருமக்களும், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களும் நிவாரணத் தொகையை மக்களிடம் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தனர்’ என கூறியுள்ளார்.

The post நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ரூ.6,000 வெள்ள நிவாரணம் வழங்கும் பணி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Nellai ,Tuticorin ,Chief Minister ,M.K.Stalin ,Thoothukudi ,Tenkasi ,Kanyakumari ,Dinakaran ,
× RELATED நெல்லை, தூத்துக்குடியில் மழை மற்றும்...